குதிரை தந்தவள்

காதல் வரம் தந்தபோது இலவசமாக
கற்பனை குதிரை ஒன்றை 
கையில் தந்துவிட்டாள்,

கைபிடித்து நடக்கும் என்றிருந்தேன்
அதன் கை பிடித்தே நடக்க செய்கிறது?

உண்ணும்போதும், உடுத்தும் போதும்
என்னுடனே 

என் தூக்கத்தைதான் அது உண்கிறது
கடிவாளம் எனக்கு பூட்டி என் மேல்
பயணம் செய்கிறது?

விட்டு விலக எவ்வளவோ முயன்றும்
என் காலில் அடித்த நினைவு “லாடம்”
அதனிடமிருந்து தப்பிக்க மறுக்கிறது

துளியாய் தொடங்கும் ஒவ்வொன்றையும்
நீர் வீழ்ச்சியாய் கொட்டச்செய்கிறது,

கானல் நீரெடுத்து பருக கொடுத்தேன்
கவிதை ஊற்றே என காவியம்
சொல்கிறது?

திருப்பிக்கொடுத்து விடுவதென தீர்மானித்து
தேவதையிடம் கொண்டுச்சென்றேன்

அவள் இரண்டு கற்பனை குதிரை பூட்டிய
சாரட் வண்டியுடன் ஊர்வலமாய்
எதிரே வந்தாள் ?
பாவம் அவள்.......?

Comments

Popular Posts