பிச்சையின் பாத்திரம்



வாய் திறப்பது 
மூடிய கதவில் மட்டும்,
மற்றபடி தட்டின்
செல்லா காசே தட்டும்
கதவை,

பாத்திரம்,
ஏந்தும் பாத்திரம் முன்பு
ஒரு பாத்திரமாய்
இருந்ததே,

துச்சம் என்றானபின்
எச்சம் என்ன?
மிச்ச மீதியில்,

வீதியில் வீசப்பட்ட பின்
நீட்டலே குறி ,
விதியில் வீசியது,

நிசப்தம் வேண்டும்
என் சத்தம் விழ,
விழும் சத்தம்
தட்டில்,

வேலை ஒன்றே,
ஏந்தி இருத்தல்
ஏந்தலுக்காய்,

தர்மம் விழும்
தட்டில்,
இரக்கமாய்,

விழும் காசு
இசைக்கும்
ஈனஸ்சுரமாய்,

எப்போதும்

உன்னிடம்,
யாசித்து கொண்டேதான்
இருக்க வேண்டுமா?

பாத்திரம் முழுதும்
பார்வை கொட்டுகிறாய்,

பசிக்கு??

அந்த நேரம் பார்த்து.....



அடுக்கடுக்காய் வேலை வரும்
அவசரகுடுக்காய் காலை வாறும்
கொட்டி சிந்தி சிதறி போகும்
தவறுதலாய் ஆயிரம்,


அம்மா அப்போதான் தைலம் தேடும்
அப்பாவின் குறட்டையிலாது
காணத்தோணும்

நனைந்த பாட்டிம்மாக்கு
இடைவிடாத இருமல் பெருமலாய்,

இன்றுதான் தம்பியும்,தம்பியையும்,
புத்தகமும் பார்க்கும் முதன் முதலாய்,

அடுத்த வீட்டு எஃப்.எம் கூடுதல்சத்தம்
போடும் கூடுதலாய்,

தேடும் விழி மயங்கி விழ
தட்டி எழுப்பும் விடியல்
ஜன்னல் திறந்து???

சலிப்பாய்...



முற்று பெறாத 
கனவின் விழித்தலில்
தொடர் வேண்டி
துணையின் அணைப்பை
விடுத்து காத்திருப்பு,

நினைவு..



உன் வீட்டிலேயே
மையம் கொண்டிருந்தது
உள்ளேயும்,வெளியேயும்
பேரமைதி

ஒரு நாள்



உன், 
நாட்குறிப்பின்
பக்கங்கள்
நிரம்பியிருக்கும்
என திறந்தேன்
ஏமாற்றம்,

எந்த பக்கத்திலும்
எழுத்தில்லை
ஏன்?வினவ,

நம்மில் எது
குறிப்பானது?
வெட்கமானேன்
வீசீ எரிந்தேன்
என் நாட்குறிப்பை,

எழுத்தில் அடக்காமல்
எண்ணத்தில்
அடைகாக்கும்
நீ என்னில்
தூரமே!!

வெளிச்சம்போட்டு காட்டும்



மறைத்துக்கொள்
மறைந்தும் கொள்
அடைத்துக்கொள்
அடைபட்டும்கொள்
காற்றை தடுப்பாய்
காதலை எப்படி?

எதை ஊற்றி அழிக்கபோகிறாய்?
எதை ஊற்றினாலும்
வளர்க்கப்போகிறாய்
மேலும் பலமாய்,

கடிந்த வார்த்தை
சொல்லும்
முயற்சியில்
கண் காட்டும்
கருணை ?
காணும்போதே,

எடுத்தெரிய இதென்ன
நீ சூட்டிய பிச்சு பூவாய்
நினைத்தாயோ ?

எதன் பின்னே
ஒளிந்துகொண்டாலும்
இதயத்தின்
உள்ளே கசியும்
எண்ணம்
எதில்
சேமிப்பாய்,

வேர்வைத்துளியாகவேணும்
துளிர்க்கும்
துடைத்து கொள்
முதலில்../

பிச்சை



பிச்சை கேட்டாள்,
இருந்தது மீதம் இல்லை,

இல்லை என்பதற்க்கும்
மனம்இல்லை,

சத்தத்தில் பசி
உண்டதில்
காதடைத்தது,

போய்விட்டாளா?
கதவை கேட்க,

அறைந்து
சாத்தியது
உணவின்
வாசம்,

இன்றைய கனவில்-4



நேற்று வந்து போன
கனவில்
நீ பெற்றுச்சென்ற
பரிசுக்கு
பதிலாய்
ஏதும் தருவாய் என்று,

கண் விழித்து
காத்திருந்தேன்?
கனவான

கனவு,

இன்றைய கனவில்-3


உன் புன்னகை 
பிடுங்கி என்
போர்வைக்குள்
போர்த்தி வைத்தேன்

கனவுக்குள்
சுருண்டு கொண்டது
போர்வை,

உதறிபோது உளரியது
உன் பெயரை,
நடுக்கமாய் ,

மீண்டும்
போர்த்தும் வரை
துவண்டு ஓர்
ஓரமாய்,

மீண்டும் தாயேன்
ஒரு புன்னகை??

இன்றைய கனவில்-2


நீ
கனவில் 
நான் 
நினைவிழந்தேன்

நீ
நினைவில்
நான்
கனவிழந்தேன்?

இன்றைய கனவில்


நான் ,
கனவை
தாண்டி 
வரும்போது

நீ ,
கதவை
தாண்டி
போய்விட்டாய்,

நீ
நினைவை சீண்டி
போன பின்

நான்
தீண்டும்
உறவில்
உறவில்லை??

வழி போக்கன் வலி



சங்கடமாய்
சில சந்தித்த 
முகங்கள்,

நிறுத்தி
விபரம் அறிய
விக்கித்து,

இதே இடம் ,
இதே நேரம்
வழி மறித்து ,
வாகனம்
ஏறி வந்தவர்,

மரித்து போய்விட்டதாய்,

இரக்கம் வந்தது
இறக்க,

இறங்கிய இடம்
இருக்க,
இறங்கியவர்
இருக்கவில்லை,

இறக்கியவன்
இரங்கலில்
இறந்தவர் இருந்த
போது,

தோப்பில் உன் மரம்



தனியே ஆடிக்கொண்டிருக்கும்
ஊஞ்சல்,
கடந்து போக
கனம் தாங்காது
விழுந்தழும்
மனது,

விரிய திறந்திருக்கும்
ஜன்னல்
கடந்து போக
விழியகலாது
காத்திருந்தகனம்,

கிணற்று மோடை
துண்டு சோப்பு,
வாளிக்கயிறு
கடந்து போக
கண் மூடி பழகி
கொள்கிறேன்
கொஞ்ச நாளாய்,

கத்தரி வத்தல்
வடகம் கூட்டு,
விட்டு விட்டேன்
உன் நினைவையும்
விட்டு விட
முற்றத்தில்
காய்கிறேன்
பசி,

நீருற்றி நீ வளர்த்த
மா மரம் காய்க்கிறது
கனியாது,
நான் பறிக்க வளையாது
ஏய்க்கிறது
உனை போலவே?

காதலை



நதி,
காற்று,
நிலா,
மேகம், முற்றம்,
பூ,செடி,
புல்,பசு
எல்லாவற்றிடமும்
சொல்லியாகிவிட்டது
உன்னைத்தவிர??

தையல் நடனம்



அரங்கேற்றம்
மேடை இல்லை
மேள தாளமில்லை

தையல் இயந்திர
கட கட ஜதியில்
உன் அபிநயம்,

தை தைக்கும்
விரல்
முன் பின்
பதம் முந்தும்
பாதம்,

நவரசம் தாங்கும்
நாற்காலி
ரசித்து,

நடு நடுவே
நளின
சிருங்காரம்,
நாக்கில் தடவும்
நூல்,

ஊசியில் நூல்
கோர்க்க
நெற்றி திலகமிடல்
நேர் பார்த்தலாய்,

தாண்டவமாய்
ஒரே மடிப்பு ஒரே மூச்சு
ஒய்யார ஓட்டமாய்
வழிந்தோடும்
துணியுருகி,

தீம் ததிகிட தீம்
ததிகிட
தீமென,,

இடையிடையே
அனிச்சையாய்
அங்கபிரதட்சம்
தலை சொரிதல்
ஆடை
சரி செய்தல்,

உன் நடனம்
சரி பார்க்க
நானிருக்கேன்

நாள் தோறும்
தை தை
மனதை
தை தை தை...

துயரக்காதலில் துணை


துளி விஷம்?

காமம்......



விஸ்வரூபமாக்கப்பட்ட
கடுகு

நெருக்கின்
விளைவித்தல்

வினை வித்தை
கூட்டல்

தெரிந்தே மறைத்து
தெரிய
செய்வது,

வழிதலில் ஆசை
வழிவழியாய்

பயாதிருக்கும்
நதிக்குவமை

சில நேரத்திலே ----



நீண்ட உரையாடலுக்கு
பிறகு 
ம்.. சொல்லுங்கள்
என்கிறாய்

முடியாது
சொல்லில்.
நம்
சொந்தம்??

உண்மையில்...


அவளிடம் 
சொல்வேன்,

அவளும் 
சொல்வாள்,

நாம்
சேர்ந்திருந்தால்
பிரிந்திருப்போம்,

பிரிந்திருக்கிறோம்
அதனால்
சேர்ந்திருக்கிறோம்

மனதார,

எச்சை பழம் -



என் 
வீட்டுக்கொல்லையில்
அணில் தேடுது
கடித்து அடையாளமிட்ட
கொய்யாவை

கடிக்கும் வரை
காந்திருந்து பறித்து
தின்று பாரட்டியது
அணிலுக்கு
எந்த மொழியில்
சொல்வது,

நீ கடித்த பின்தான்
சுவை கூடுதல்
என்று,

டூ இன் ஒன்



இரு இதழ்
ஒரு
முத்தம்?

என்னியல்பு......



உற்சாகப்படுத்தும் 
உன்
வார்த்தைகளை 
விட,

உதாசித்து 


உசுப்பேற்றும்
உன் 


வார்த்தையில்


கூர் தீட்டுகிறேன்.

ஞாபகத்தில் படுத்துகிறாய்,,,,,



யாரும் இல்லா நேரத்தில்
கைகோர்க்கும்
உன் ஞாபகங்கள்,

நெடும் பயணத்தில்
பயண சீட்டில்லாமல்
பக்கத்திலே நீ,,

பார்வை வெளியே
திரிந்தாலும்
முகத்தில் மோதும்
தென்றல் நீ,,

இயந்திர இரைச்சல்
உடைக்கும் உன்
மெளன பேச்சு,

முட்டிக்கொண்டு வரும்
கண்ணீர் துளியில்
ஞாபகம்
கரையாதிருக்க,

நிதர்சனத்துள்
நுழைகிறேன்
விநாடிக்கு குறைவான
நேரம்,

உன் வடிவக்கடிதம் இப்போது


மடிந்து போய்விட்டது
வார்த்தைகளும்
கசிந்து விரிந்து
விட்டது

மடிப்பில் எழுத்துக்கள்
மசிந்து விட்டது
மறுபடியும்,
மறுபடியும் படித்து
படித்து,

மனப்பாடம் ஆனதுதான்
இருந்தாலும்
எழுத்தாய்
பார்க்கும் உன்
வடிவக்கடிதம்,

மீதமாய் தங்கியிருக்கும்
கடிதம் இது
விகுதியில் அழைத்திருப்பாய்
என்னை,
விதியில் பிரிந்துவிட்டாய்
பெண்ணே,

இனியொன்றும்
கடிதம் வராது
இனிதான இக்கடிதம்
என்றும் வாராது,

உலகில் உன்னை மட்டும்...



ச்சீ இந்த பழம்
புளிக்கும் என்று
ஒதுக்க 
முடியவில்லை
கிட்டாத ஒன்றிற்க்கான
காரணமாய்,

காரணம் ?
அதற்க்கும்
நீதான்
காரணம்!!!

இரவானதும் தனியே-13



பழைய
நாளுக்கு மூன்றில்
கட்டில்
நாளும் மூடிய
ஒரு தட்டில்
மணம் கூட
மலர் விரித்து
வெட்ட கூடாதென்று
துண்டுகள்,
அயராதிருக்க
அயல் ராது

முட்டுகொடுத்த
கட்டில்
முனகல்
வெளியேறாதிருக்க,
தலையனை துணை,
ஜன்னல் இடுக்கில்
இருவரில் ஒரு விரல்
மறைப்பு,
கதவு
நாதாங்கி நசிந்து!!
கவனமாய் முட்டாய்
முதுகுகள்,
வலிக்க
மாற்றி,மாற்றி,

விடியுமுன் பகலாய்
விடி விளக்கு,
மின் கசிவால்
மின் வயர் நீண்டு
அப்பா அறையில்
விசை அனணக்க?

வெட்கி ஓடும் இரவு,
வெட்கம் கெட்டு
விடியும் பகல்
அச்சம் விட்டு,
முட்டுக்கள்
நீக்கீ,
பத்திரமாய்
அதனதன்
நிலை மாறாது
அப்படியே
விட்டு,
விலகியதும்
அடுத்த இரவுக்கான
புது யுக்திகள்,
மனம் வலிக்காது!!

இரவானதும் தனியே-12



மெதுவாய் தேடி
தட்டுத்தடுமாறி
அகப்படும்
ஞாபக கைத்தடி,

பிடி பட்டது ,
ஒரு முறை தட்டி
எழ
போகும் பாதை
விட்டு,
வந்த பாதையில்,

தட்டுப்படுதா
இருமறுங்கிலும்
ஏதேனும்,
அதனதன் இடத்தில்
ஆழ்ந்திருக்கிறது

இன்னும் தூரமாய்
நீளும்போது
தவறி விழ
தவறிப்போனது
ஞாபக கைத்தடி,

நானில்லாமல்
தனியே ஞாபகம்
மட்டும் எப்படி
நடக்கும்?

என்னை
பிடித்து
ஞாபகம் நடக்கிறதா?
ஞாபகம் பிடித்து
நான்
நடக்கிறேனா!!

நிற்க்கிறோம்
நகராமல்
ஞாபகம் தனியே
நான் தனியே

இரவானதும் தனியே-11


மழை..
நனைந்தபடி உன்
முன்,,,

துண்டு ,


தருகிறாய்,
குடை மறைக்க!!!

இரவானதும் தனியே-10



பழையன கழிதல்........



ஞாபகம் இருக்கிறதா

சிலவற்றை

திரும்ப

ஞாபகமூட்டுகிறாய்,

இரவானதும் தனியே-9



எத்தனையோ முறை
தனித்து 
இருந்திருக்கிறோம்
இது போல
தவித்ததில்லை,

இரவானதும் தனியே-8



தூது .....

உன் விசாரித்தல்
யார் மூலமோ
சேர்க்கப்படுகிறது
என்னிடம்,

நம்பிக்கையின்
பாத்திரமாய் தூதாய்
வந்தவரிடம்
திருப்புதல்
கிடைக்குமென
காத்திருப்பாய்,

எதில் திருப்தி
கொள்ளுமோ
உன் மனம்
மெளனத்தில்
ஆழத்தில்
மூழ்குகிறேன்,

கண் விழிக்கிறேன்,
வந்தவர் காணாது?
மீண்டும் ஒரு செய்தி
இருக்கிறேன் என்ற
சொல் தாங்கி,

நிம்மதியில்
பூக்கிறது மனம்
என் முகம்
உன்னிடம் காண்பித்த
தூதை எண்ணி,

இரவானதும் தனியே-7


மறைகிறது
ஞாபகம் இல்லை
மறந்தே விட்டேன்
என நினைக்க,
பவுர்ணமியாய்
வெட்ட
வெளியில்,,,நீ

தொலைவாய்
தூரமாகிவிட்டேன்
பார்க்க இயலாது
என இருக்க,
வட்டமாய் ஒரு
ஆரம்
புள்ளியில்,,, நீ

விழுகிறேன்
ஆழமாய்
மேலிருந்து
திரும்ப முடியாது
என நினைக்க,
தாங்கிய
நதியில்,,,நீ

அடிக்கிறது
அலை
நனைந்துவிட்டேன்
மீண்டும் வராது
கரையேற,
கால்
பிடித்திழுக்கும்,,நீ

இரவானதும் தனியே-6



உன் வரவுக்காய்
காத்திருந்த வேளை
வருத்தப்படுகிறேன்,

தாழ் நீக்கியதும்
தாவியணைப்பாய்
தரிக்கட்டையாய் தவிப்பேன்
என்றிருந்தேன்,

தாவி துலாவும் உன்கண்கள்
என்னை தவிர்த்து
யாரை
தேடுது
உள்ளே?

நீயும் திருடனாய்
அடிமேல் அடி வைக்கிறாய்
வலிக்காது?
ஒழிந்து கொண்டது
யார்?

இதற்க்குத்தான்
அறிவிப்பில்லாது
வந்தாயோ?

செருப்பில் தொடங்கி
அடுப்புவரை
ஆராய்ந்தாய்
யாரும்
தென்படாது போகவே
புன்னைக்கிறாய்,

எதை சோதிக்கிறாய்
எனையா?
பொருளை மட்டும்
காத்திருப்பேன்
என்றிருந்தாயோ?

உன்னிடம் வந்தாரய
ஒப்புக்கொள்வாயா?
ஒப்புக்கேனும் ,

இனி அணைத்தென்ன
ஆரத்தழுவியென்ன
தேடி நீயே
தூண்டிவிட்டாய்,

எரியும் தீயில்
முன் என்ன பின் என்ன
சுட்டது நீ
இனி எரிவதும்
நீ,,,

இரவானதும் தனியே-5


சற்று யோசித்திருக்கலாம்
ஆவேசமாய் 
அவிழ்த்த
வார்த்தைகள்
தைத்திருக்கும்,

மூடிச்சு பிரித்து
கொட்டியதில்
சிதறியதும்
தவித்திருப்பாய்,

ஊசியாய் குத்தும்
ஒவ்வொரு சொல்லும்
உதறிய சாக்காய்
உன் மெளனம்
பொசுக்கென,

நுரைத்து அடங்கிய
பால்
மறைத்து படர்ந்த
ஆடையாய்
உள்ளுக்குள்
சூடாய் நீ,,,

மிச்சம் ஏதுமிலாது
நிர்கதியில்
என்
நிர்வாணம்,

இரவானதும் தனியே-4



எத்தனை முயற்சி
அத்தனையிலும்
தோல்வி

ஒவ்வொரு
முயற்சியிலும்
வாய்ப்புகள்
நழுவியே,

அயற்சி இலாது
அடுத்த முறைக்கான
ஆயத்தம்,

விட்டு போக
மனம் இல்லை
விடாதிருக்க
பயமில்லை

அனுபவத்தில்
கற்றதாயிரம்
அனுபவமே கற்றதாகிடும்
புதிய ஒன்றை,

இரவானதும் தனியே-3



அது காயட்டும் நிலா
தூரத்தில் துணையிலா
நேற்று இரவில்
சேர்த்து பார்த்தது
இன்று தனியே
உலா,

தனித்திருப்பதில்
தாகம் கூட,
கூட வருமோ?
மேகம் தனிவாய்,
மறைக்கும்

மோகம் தனியாய்
தவிக்கும் சோகம்
துணைக்காய்
இருக்கும்,

வெட்டவெளியில்
யார் கொடுப்பார்
யாசிப்பை,

கட்டவிழ்ந்த கூந்தல்
நிறமாய் இறுக்கத்தில்
இருக்க
ஒரு வித கிரக்கத்தில்
தவிக்க,

மெல்ல தவழும்
வான் மேனியில்
நிலா தனியே

இரவானதும் தனியே-2


விடுபட்டேன்
நீந்துவதில் இருந்து
மூழ்குவதரியாது,

குரல் எழுப்ப
விருப்பமில்லை
என் குரல் உனக்கு
கேட்கும் வரை,

காப்பாற்றி பின்
காணாது
சாவதை விட,
காணாமல் போகிறேன்
கரைகாணாது,

தேடி எடுப்பாய் எனில்
மீன் வயிற்றில்
மீதமாய் ஏதும்
மிச்சம் இருக்கும்,

கரையில் ஒதுங்கிய
கூட்டில் ஏதும்
சதை ஒட்டியிருந்தால்
எடுத்துக்கொள்,

ஏனென்றால்
அதில் நீ இருப்பதால்
பிடித்துக்கொண்டே
இறந்திருப்பேன்,
பீய்த்தெடுத்துக்கொள்,

கூட்டில் ஏதும்
மீதம் இருக்கிறதா
பார்,
ஆம் எலும்புகூடாய்
எழும்பாமல்,

விட்டு விடு
இருந்திருந்தாலும்
இப்படியேதான்
இருந்திருப்பேன்
இறந்திருக்கிறேன்
அப்படியே,

இரவானதும் தனியே


வாசனைக்காய் 
போட்டு எடுத்த
கறிவேப்பிலையாய்,

வீசுவதில் கைதேர்ந்தவள்


நீ,,
வதங்கி விழுகிறேன்
நிறம் மாறாது,
எடுப்பாய்
மீண்டும் என,

ஒவ்வொரு முறையும்
புதிதாய் பறிக்கிறாய்
குருதி வடிய,
வண்ணம்வேறு ,
வலி
ஒன்றே

தேவை பூர்த்தியானதும்
தேவையில்லை
தேடிவருவாய் என
காத்திருப்பது
கானலே,

இருந்தும் உன் கை
தீண்டலுக்கு
கிளைதாண்டி
வளைந்திருப்பேன்


நீ மட்டும்
பறிக்க,

இன்று



இன்று 
நீ 
கனவில்
வந்தால்
கதவை தட்டு

உன் நினைவில்
உறங்கியிருப்பேன்
நினைவை உடைத்து
கனவில் கலப்போம்

போகும் போது
நினைவை போர்த்தி போ
நீ கனவில்
நான் நினைவில்
நீங்காது
இன்று,

ஞாபகச்சுட்டி


பழைய புகைப்பட சேர்வை
பிரிக்கும் போது
நிகழ்காலம்
புகையாய்
மறைகிறது,

ஒவ்வொரு படத்திலும்
அத்தியாயம், அத்தியாயமாய்
கதைகள் சொல்லி
நகர்கிறது,

பவுடர் பூச்சுக்கும்,
உதட்டுச்சாயத்திற்க்கும்
கன மைதீட்டலுக்கும்
நீ இப்போது
விளக்கம் கூறி
துடைக்கிறாய்,

விலகி நின்றதன்
காரணத்தை
நீ இப்போது
விளக்குகிறாய்
விலகியது விளங்காது,

தந்துவிடு என்கிறேன்
இல்லை இருக்கட்டும்
படமாகவேணும்,
நீ இப்போதும்
பட்டும் படாமலேதான்
இருக்கிறாய்,

மூட மனமில்லை
திரும்ப திரும்ப
பார்க்கிறோம்
பேரன்,பேத்திகள்
மடியில் இருத்தி.
தனிதனி இடத்தில்,

அறிமுகம்...


எவ்வாறு
அறிமுக
படுத்துவாய்
என்னை,
அவனிடம்,

ஆறுதல்....


வீதியில் 
தொலைந்ததை
விதியில்
தேடி,

திரும்புகையில்,,,


வாசல் 
பூட்டியதும்
ஜன்னலில்
கண்ணீர்,

துடிக்கும்
துடைக்க

மீறி வர
மீண்டு வர

வளைந்து
கொடுக்கும்
கம்பிகள்,

மனம்
இரும்பாய்,

யாருக்கு...



நல்லவளாய்
நடிக்கிறாய்
முகம்
மூடி,

காண்பதற்க்கே....


நடக்கையில்
தரை முன்னைவிட 
வேகமாய் முந்த
நகராதிருக்கும்
நடை,

அருகில் தூரமாகியது
காண கண் காணாது
விழி மறுக்கும்
இமையாய்,

செய்வதரியாது
செய்வது யாது?
யாதுமாகியது
ஏதுமில்லாது,

ஒரு சந்தர்ப்பம்
ஒரு தீண்டல்
ஒற்றைபடையில்
இரட்டிப்பாக,

தவித்த போதெலாம்.....


பழக்கபடுத்திக்கொண்டிருக்கிறேன்
தனிமை தவிர்த்தல்
எப்படி என்று,

மரத்தோடும், இலையோடும்
பேசிப்பேசி

அசைதலில், சொல்லுதற்க்கு
ஆமோதிப்பதாயும்,

அமைதியில், சொல்லுதற்க்கு
கேட்பதாயும்,

குமுறியழும்போது
துடைக்க இலைகள்
முயற்ச்சிப்பதாயும்,

சிரிக்கும்போது காற்று வீசலில்
சலசலப்பாய் சிரிப்பதாயும்,

பழக்கபடுத்திக்கொண்டிருக்கிறேன்
தனிமை தவிர்த்தல்
எப்படி என்று,

விழும் உதிர் இலை,
ஆசீர்வதிப்பதாயும்,

கசியும் பிசினோ கண்ணீராய்
விழுவதாயும்,

அமைதியடைகையில் எறும்பு
கடிக்க மரம்
உசுப்பியதாயும்,

பழக்கபடுத்திக்கொண்டிருக்கிறேன்
தனிமை தவிர்த்தல்
எப்படி என்று,

தூண்டில்காரா....


முள் ,
தொண்டையில்
சிக்கியதை 
உணர்த்தவே
இழுக்கிறேன்,

கவனியாது
காண்பதெங்கே?
நீ,,,
காதலனா என்ன?
முள்ளையும் 


எடுக்காது
என்னையும்


விடாது,

நீ,,,
சற்றே வித்தியாசம்
புழு இட்டு 


பிடிக்கிறாய்

அவன்...
புழுவாக்கியல்லவா
மகிழ்கிறான்

உனக்கெப்போதும்
தக்கையின் மீதே
கண்,

அவனுக்கு
அவ்வப்போது என்
தங்கையின் மீதும்
கண்,

நீ..
வீசீவதில் சிக்கும்
மீனாய்,

அவன்,
வீசுவதில் சிக்கினேன்
வீனாய்

மழையுடன் இன்று...


வெளியே 
தேநீர் கொட்ட
கையில் 
மழைக்கோப்பை.



2 நேற்றைய
மழையை
பொய்த்து,

மழை பேயாய்
பெய்த..


3 மழை தொட

காட்டிக்கொடுக்கும்

மின்னல்,

ஆடையை தூக்கிபிடித்து....



மழைக்கு 
ஒதுங்கியபோது,

மழையை
ஒதுக்காமல்

நனைந்த
மாடு,

ஆடைக்கான
வாழ்க்கை??

அடச்சே....

விழி..;..


நேர் பார்க்க
வெருண்டோடும்
ஓணாண் போல்
தாவிப்போகும்
பார்வை இயலாது
தவிர்த்தே..

இரவில் முகநூல்

யாருமில்லா தெருவில்
ஒற்றை வெளிசமாய்
காத்திருக்கும்
சாட்டிஸ்டுகள்,

தூர கேட்கும் இரயில்
ஓசையாய் ஓரிரு
கமெண்டுகள்,

பாறைவண்டியின்
கடமுடா சத்தமாய்
இரண்டு மூன்று
லைக்குகள்,

விழித்தழும் குழந்தை
குரலாய் சில,
ஹாய்,ஹாய்கள்,

தாலாட்டிடும் தாயின்
தூக்க பாடலாய்
சில ஸ்டேட்ஸ்கள்

இன்னுமா தூங்கலை
எனும் எதிர் வீட்டு
பாட்டியின்குரலாய்
நடு சாம விசாரிப்புகள்,

நேரமாச்சோ திடுமென
எழும் பால்காரனாய்
சைனவுட்டுகள்,

புரண்டுப்படுக்கும்
துணைவி
தவழும் புதுகதை,
கவிதைகள்,

முகச்சுழிப்பு.....



காதலித்து
நாள்கள் பல ஆனதால்
புளித்து விட்டதோ
என்னமோ?

பவுடர் பூச்சு


கண்ணாடியில்
நெடுநேரம்,
கண்டால்
பேசுவது யாது
ஒத்திகை,

சீவீ சிங்காரித்து
படித்தவனாய்
காட்ட பவிசுக்கு
இரண்டு பேனா,

பாசக்காரனாய்
காட்ட தூசு படிந்த
பர்ஸில் குடும்ப
போட்டோ,

பணக்காரணாய்
காட்ட அப்பாவிடம்
சுட்ட பணம்
வெளித்தெரியும் படி,

சொந்த
வாகனமிருப்பவனாய்
காட்ட கடனாய்
பெற்ற பைக்கில்
லாவகமாய்,

எதோச்சை சந்திப்பாய்
காட்ட கால்கடுக்க
காத்திருந்ததை
மறந்து எதிரே
நடந்து வர,

என்னைத்தாண்டி
பின்னால் தேடினாய்
என்னை ,
யாரை? தேடுகிறாய்

பூச்சி இலாது
உன்னை,
சுருக் ...

திரும்ப வந்து
பார்க்கும்போது
கண்ணாடி
வெட்கத்தை
காட்டியது

நிச்சயமாக...



வாழ 
பிடிக்கவில்லை
என்பது
எவ்வளவு 
உண்மையோ,

அது போல
சாகவும் 


பிடிக்கவில்லை
என்பதும் 


உண்மையே?

வலியான வார்த்தை

வராதே இனி
ஒரு வார்த்தையில்
வதை,

பெயருக்கு மட்டும்...


கெத்தாய் எல்லா பீரோக்களிலும்
என் பெயரும்,அவள்பெயரும்

கொத்தாய் சாவிகள் மட்டும்
அவள் இடுப்பில்,

இடையிடையே
அவசரத்தேவைக்காய் ஆடும்
என்னாட்டம் பாரீர்,

நேற்றைய மழை



நனைத்தே போனது

நனையாமல்

என்னில்,,

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே


உள் பாவாடை
நாடா கோப்பதிலாகட்டும்,
புடவை
மடிப்பு பட்டி
பிடிப்பதிலாகட்டும்,
முதுகில்
பிற செயல்
செய்வதிலாகட்டும்,

சிறு நேர அனிச்சை
செயலாகவே
மறந்து,மறைத்து போகும்
ஆண்,
எப்போதும் அதையே
அன்பென நினைத்தே
ஏமாறும்
பெண்,

போகும் பயணத்தில்
கடந்து போகும்
காட்சிகள்,
நினைத்து பார்க்கவே
முடியும்.

வீடுநிறைய..........




உன் வெட்கத்தை
திரை சீலையில்
தொங்க விடுகிறாய்,

உன் கோபத்தை
ஜன்னல் கதவில்
படீரிட செய்கிறாய்,

உன் ஞாபத்தை
நிலைக்கதவில்
நிற்க்கச்செய்கிறாய்,

உன் வசீகரத்தை
துணிக்கொடியில்
காயப்போடுகிறாய்,

உன் எதிர்ப்பார்தலை
காலண்டரில்
கிழிக்கிறாய்,

உன் வனப்புகளை
நிலைக்கண்ணாடியில்
நிதம் பூசுகிறாய்,

உன் பாசங்குகளை
சில சமயங்களில்
சமைக்கிறாய்,

உன் வெறுப்பை
திசைக்கொன்றென
வீசியிருக்கும்
செறுப்புகளில்,
L

கடினமானது .....




உன் சாயலில் யாரும்
இல்லை,

சாயல் கொண்டோர்
இடத்தில்
நீ இல்லை,